/

லாரி ஓட்டும் முதல் பெண்மணி: சட்டம் படித்து விட்டு லாரி ஓட்டப் போவதா!

அண்மையில், (2016 மே 23)  கேரள அரசின்  மது விநியோகிக்கும் கழகத்தின் பாலக்காடு  கிளை  சேகரத்தில் 14 சக்கரங்கள் உள்ள  ராட்சஷ  லாரி

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:27 pm

பிஸ்மி பரிணாமன்

அண்மையில், (2016 மே 23)  கேரள அரசின்  மது விநியோகிக்கும் கழகத்தின் பாலக்காடு  கிளை  சேகரத்தில் (ஞ்ர்க்ர்ஜ்ய் ) 14 சக்கரங்கள் உள்ள  ராட்சஷ  லாரி ஒன்று  சரக்குடன்  வந்தது.  லாரியை நிறுத்தி விட்டு,  கீழே இறங்கிய  ஓட்டுநரைப் பார்த்து அனைவரும் திகைத்தனர்.  காரணம், பெண் ஓட்டுநர். அதுவும் சட்டம் படித்தவர்.

காலம்  நேரம்  பார்க்காமல்  ஓடும்   சரக்கு  லாரிகளை  ஓட்டுவதற்கு பொருத்தமானவர்கள் ஆண்கள்  என்பது  எழுதப்படாத  விதி. அத்தி பூத்தது மாதிரி  அகில இந்திய அளவில் ஒன்றிரண்டு  பெண்கள் இப்போது  சரக்கு  லாரியை  ஓட்டுகிறார்கள். ஆனால்  இந்தியாவில் முதன் முதலாக லாரி ஓட்டத் துவங்கிய பெண்ணான  யோகிதா ரகுவன்ஷி,  பாலக்காடு வரை  வருவார்  என்று  யாரும் எதிர் பார்க்கவில்லை.

செய்தி  வெளியே  பரவியதும், டிவி  சானல்களும், பத்திரிகைகளும்  யோகிதாவைப்   படையெடுத்து வர சில  நிமிடங்களில்  யோகிதா  விஐபி  ஆகிவிட்டார்.  லாரி ஓட்டுவதில்   16 ஆண்டுகள் அனுபவம் இருக்கும் யோகிதாவுக்கு 45 வயதாகிறது. உடன் பயணம் செய்யும் கிளீனர்  திரிலோக் சிங்  என்கிற  ஆண்தான் சகோதரியாக  யோகிதாவைப்  பார்த்துக்  கொள்கிறார்.

யோகிதா விருப்பப்பட்டு  லாரி ஓட்டுநராகவில்லை. வழக்குரைஞராக  பயிற்சியைத்  தொடங்கியவருக்கு,  திருமணம் என்ற பெயரில் பெருஞ்சோதனை வந்து சேர்ந்தது. வாழ்க்கை  திசை மாறிப்  போனது.

யோகிதா தொடர்கிறார்:

""எனது சொந்த மாநிலம்  உத்திரப் பிரதேசம். வளர்ந்தது மகாராஷ்ட்ராவில்.  வழக்கறிஞராக  பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திருமணப் பேச்சு வார்த்தை நடந்தது. வந்த வரன்  வக்கீல் என்றார்கள். வழக்காடும் துறையில் வரன்  உள்ளதால்,  வக்கீலான எனக்கு உதவியாக இருக்கும்  என்று நினைத்து  அந்த  வரனை  "ஓகே' செய்தோம்.  1991- இல் திருமணம் முடிந்ததும் கணவருடன் அவர் வசிக்கும்  போபால் நகரத்திற்கு  வந்து சேர்ந்தேன்.   சில நாட்களில் கணவர்   லாரி ஓட்டும்  டிரைவர்  என்று  தெரிய வந்தது. தலையில் ஆயிரம் இடிகள்  இறங்கியது போலிருந்தது. நானும்  என்  குடும்பத்தினரும்  சரியாக  ஏமாற்றப்பட்டிருக்கிறோம்.. வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று தேம்பித் தேம்பி அழுதேன். சாப்பிடப் பிடிக்காமல் பல நாட்கள் பட்டினி கிடந்தேன்.   இங்கே  பெண்ணுக்கு  திருமணம்  நடந்தால், அவளுக்கு  எல்லாம்  கணவன்தான். அந்த   பாழாய்ப்போன சமுதாய  நீதியை  என்னால்  மீற  முடியவில்லை. வீட்டை  விட்டு  வெளியேறினால், விவாகரத்து  செய்தால்,  நடுத்தர  வர்க்கப்  பெண்ணுக்கு  ஆயிரம்  பிரச்னைகள்  அடுக்கடுக்காக  வரும். 

வேறுவழியில்லாமல்  போபாலில்   ஏதோ வாழ்ந்தேன். ஒரு மகள். ஒரு மகன். கணவர்  சாலை விபத்தில் 2000-இல் இறக்க. கணவரின் சொத்துக்களை  அவர் குடும்பத்தினர் எடுத்துக் கொண்டனர். நாங்கள்  தனிமரம்  ஆனோம்.   எதிர்காலம்  இருண்டு  கேள்விக் குறியானது. குடும்ப பாரம், தானே என் தோளில் இறங்கியது. கெüரவமாக  வக்கீல்  வேலை செய்யலாம் என்றால்  அந்தத்  தொழிலை  நான்  புதிதாகத்  தொடங்க  வேண்டும். அப்படி  தொடங்கினாலும்,  தொழிலில் ஆரம்பத்தில் போதுமான வருவாய்  கிடைக்காது.  சொற்ப  வருமானத்தை நம்பி, வழக்கறிஞர்  தொழில்  செய்ய முடியாது. அடுத்தவரை நம்பி வாழ எனக்குப்  பிடிக்கவில்லை. குழந்தைகளின்  கல்வி,   குடும்பத் தேவைகள் அதிகமாக இருந்தன. அவற்றைச் சமாளிக்க  போதுமான  வருமானம் தேவை.  லாரி ஓட்டுவதில், ஊதியம்  உடனே கிடைத்துவிடும். அதனால், லாரி  ஓட்டத்  தீர்மானித்தேன்.

விளையாட்டாக வாங்கி வைத்திருந்த கனரக  வாகனம் ஓட்டும்  லைசன்ஸ், கை  கொடுத்தது.  சட்டம் படித்து விட்டு   லாரி ஓட்டப் போவதா  என்று பலரும்  தடுத்தார்கள். இருந்தும், லாரி ஓட்டுநராக 2000-இல்  மாறினேன்.

 இடதும் வலமுமாக  ஸ்டீரிங்கை வளைத்து செலுத்தினாலும்,  என் வாழ்க்கையை  நேர்கோட்டில் சீராகக் கொண்டு போக லாரி ஓட்டுநர் வேலை  உதவியது.   ஆரம்பத்தில், லாரி ஓட்டும் போது, எல்லோரும்  என்னை  ஏதோ வேறு கிரகத்திலிருந்து  வந்த விசித்திரமான ஜீவியாக  வித்தியாசமாகப்  பார்த்தார்கள்.  பலரும்  கேலியும் கிண்டலும் கலந்து விதம் விதமாக  கமெண்ட்களை  செய்தனர்.  பலரையும் அண்ணே.. என்று அழைத்து  சமாளித்திருக்கிறேன்.  பலரும்  என் நிலைமையைப்  புரிந்து  உதவியுள்ளார்கள்.

 "இந்தியாவின் முதல் பெண் ஓட்டுநர்' நான்தான் என்று பத்திரிகைகள் எழுதின. டிவி சானல்களிலும்  பேட்டிகள் ஒளிபரப்பாயின... எனது உழைப்பையும், குடும்பத்தின்  பொருளாதார  நிலைமையையும் கணக்கில் எடுத்து  "மகிந்திரா'  நிறுவனம்  ஒரு லாரியை  அன்பளிப்பு  செய்தது. இந்தியா முழுவதுமாக இதுவரை சுமார் ஐந்தரை லட்சம் கி.மீ தூரம் லாரி    ஓட்டி சென்றிருக்கிறேன்.  தூக்கமில்லா    இரவுகள்  தினமும்  குளிக்க  முடியாத  நிலைமை. எங்காவது  குளத்தில், ஆற்றுப்படுகையில்  குளியல்,  தெருவோரக்  கடைகளில்  உணவு,  இயற்கை உபாதை.. அதுவும் பெண்ணுக்கு... ஓ.. கஷ்டமோ கஷ்டம்.. சில பயணங்களில், சாமான்களை  ஓரிடத்திலிருந்து  கொண்டு போக,   20 நாட்கள் வரை  லாரி ஓட்டவேண்டி வரும்.  காற்று, மழை, வெயில், வெப்பம், குளிர், ஏற்றம் இறக்கம்  என்று பல அசெüகரியங்களை தவிர்க்க  முடியாது. எல்லாம்  பழகிப்போய்  விட்டது.

தமிழ்நாட்டில்  லாரி  ஓட்டும்  பெண்  செல்வமணியையும் சந்தித்துப்  பழகியிருக்கிறேன். அனுபவங்கள்   பலவிதம்  எல்லாவற்றையும்  குறித்து  வைத்திருக்கிறேன். மனசிலும்  பதியம்  போட்டிருக்கிறேன்.  கிணற்றுத்  தவளையாக   இருந்த  நான்,  இப்போது  லாரி  ஓட்டும்  அனுபவத்தால், விரிந்த    கடலில்  விளையாடும்   டால்பினாகி   விட்டேன்.  அனுபவங்களை,  புத்தக  வடிவில்  கொண்டு வரவேண்டும்  என்ற  ஆசையும்  இருக்கிறது.  தென்னிந்தியாவில் சாலைகள்  நன்றாக பராமரிக்கப் படுகின்றன.  வடநாட்டில்  சாலைகளைப் பற்றி சொல்ல வேண்டாம். குண்டும்  குழிகளும்  அத்தனை மோசம்..  லாரி  ஓட்டுவதில்   பல  பிரச்னைகள்  உள்ளன. சொந்த  அசெüகரியங்கள்  தவிர  போலீஸ், போக்குவரத்துத்  துறை  அதிகாரிகளின்  கெடுபிடி  அதிகம். இந்த  தொந்தரவுக்குப் பயந்து கொண்டு  லாரி  டிரைவராக  ஆட்கள் வேலைக்கு வருவதில்லை. அதனால், வேலைக்கு  லாரி   டிரைவர்களின்   தேவை  அதிகரித்திருக்கிறது. 

மூத்த மகள்  யாஷிகா.  பொறியியல் படிப்பினை முடித்து விட்டாள். மகன்  யஷ்வின்  பிளஸ் டூ படிக்கிறான்.  இவர்கள்  படிப்பு முடிந்து நல்ல   வேலையில் சேர்ந்து விட்டால்,  மகளுக்குத்  திருமணம் செய்து வைத்துவிட்டால்,  என்  பொறுப்பு   நிறைவாகும். நிம்மதி  கிடைக்கும். இதுவரை  லாரி  ஓட்டி  கஷ்டப்பட்டதற்கு  ஒரு  அர்த்தம்  இருக்கும். அந்த  நிறைவில்,  லாரி ஓட்டுவதிலிருந்து   ஓய்வு  பெறுவேன்.  அதுவரையில் லாரியுடன் என்  பயணம்   தொடரும்...''  என்று  முடித்த  யோகிதா, இந்தியாவின்    சட்டம்  படித்த  முதல் லாரி  ஓட்டுநரும்  ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.